திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியொன்றில் எட்டாம் வகுப்பு பயிலும் ரஹமத்துல்லா என்கிற மாணவனை அதே பள்ளியில் பயிலும் சக மாணவன் அரிவாளால் வெட்டியுள்ளான். தடுக்கப் பாய்ந்த ஆசிரியரையும் வெட்டியுள்ளான். காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சிறுவன் மீது இன்னொரு சிறுவன் நடத்தியுள்ள இந்தக் கொலைவெறித் தாக்குதல் பெரும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பள்ளிச் சிறுவர்களிடையே இதுபோன்ற வன்முறைக் கலாச்சாரம் பெருகிவருவது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அந்த இரு மாணவர்களுக்கும் இடையில் பென்சில் கொடுக்கல் வாங்கலில் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. அதனையொட்டி சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அவர்களுக்கிடையில் பிரச்சினை உருவாகியிருக்கிறது. அப்போது வகுப்பாசிரியர் இருமாணவர்களை கண்டித்ததோடு அவர்களின் பெற்றோரையும் பள்ளிக்கு வரவழைத்து நடந்ததைக்கூறி அறிவுறுத்தியும் அனுப்பியுள்ளார். ஆனால், இன்று காலை அதே ஆசிரியர் வகுப்பெடுத்துக் கொண்டிருக்கும் போது பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மாணவன் ரஹமத்துல்லாவை வெட்டியுள்ளான். அதனைத் தடுக்க முயன்ற ஆசிரியரையும் வெட்டியுள்ளான்.
வகுப்பறையில் மற்ற மாணவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி பதறிக் கதறியுள்ளனர். பின்னர் வெட்டிய மாணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சார்ந்த பள்ளி மாணவர்கள் நாங்குநேரி சின்னத்துரை, தேவேந்திர ராஜா ஆகியோர் மீது இது போன்ற கொலைவெறித் தாக்குதல்கள் நடந்துள்ன. தற்போது பாளையங்கோட்டையிலும் அதேபோன்ற வன்முறை நடந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0 கருத்துகள்