வேங்கைவயல் வழக்கு விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேருக்கும் ஜாமீன் வழங்கி புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக புதுக்கோட்டை போலீஸார் விசாரணை நடத்திய நிலையில் பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இதற்கிடையில், அதே பகுதியைச் சேர்ந்த காவலர் முரளிராஜா, முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகியோர் ஈடுபட்டதாக, மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக புகார் தெரிவித்த சிறுமியின் தந்தை கனகராஜும், குற்றம் சாட்டப்பட்ட மூவரும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த வழக்கு வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மார்ச் 11-ம் தேதி வழக்கு விசாரிக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முரளிராஜா, முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகியோருக்கு சம்மன் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மூவரும் நேற்று நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இன்று மீண்டும் ஆஜர்...
அப்போது, தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மூவரின் மனுவையும் விசாரித்த பொறுப்பு நீதிபதியான மாவட்ட உரிமையில் நீதிமன்ற நீதிபதி, 3 பேருக்கும் ஜாமீன் வழங்கியதுடன் மூவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கவும் உத்தரவிட்டார்.
மேலும், வழக்கு விசாரணையை மார்ச் 12-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். இதையடுத்து, 3 பேரும் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 கருத்துகள்