அமெரிக்காவின் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் முதற்கட்டமாக 205 இந்தியர்களை அமெரிக்கா ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட டிரம்ப் சட்டவிரோத குடியேறிகளை கையாள்வதில் கடுமையான கொள்கைகளை அறிவித்திருந்தார். அமெரிக்காவில் வசிக்கும் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பும் நிர்வாக உத்தரவிலும் அவர் கையெழுத்திட்டார். இதன்படி, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளை அமெரிக்கா நாடுகடத்தி உள்ளது.
அந்த வகையில் தற்போது அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 205 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகின. பல்வேறு மாகாணங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சட்டவிரோத குடியேறிகள் அமெரிக்காவின் ராணுவ விமானத்தில் அனுப்பப்பட்டுள்ளனர். அதில் டெக்சாசில் இருந்து புறப்பட்ட சி-17 விமானத்தில் 205 இந்தியர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்பது உறுதிபடுத்தப்பட்டு அவர்கள் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நோக்கி அழைத்து வரப்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். இது குறித்து இந்திய அரசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது
0 கருத்துகள்