Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

டாஸ்மாக்கில் காலி பாட்டிலுக்கு ரூ.10 கொடுக்கப்படும் நீதிமன்றம் தீர்ப்பு.

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூலம் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் நடைமுறை ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. மலைபிரதேசங்களில் மதுபாட்டில்களை வீசிச்செல்வதால் விலங்கினங்கள் பாதிக்கப்படுவது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபான பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக விற்கவும், திருப்பித் தரப்படும் காலி பாட்டிலுக்கு ரூ.10 திருப்பிக் கொடுக்கவும் வகை செய்யும் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின்படி காலி மதுபாட்டில்களை கடைகளிலேயே திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்த டாஸ்மாக் 2022ல் முடிவு செய்தது. தற்போது இத்திட்டம் ஒன்பது மாவட்டங்களில் முழுவதுமாகவும், ஏழு மாவட்ட மலை பகுதிகளிலும் செயல்பாட்டில் உள்ளது.

இங்குள்ள கடைகளில் மதுபாட்டில் விற்கப்படும் போது கூடுதலாக 10 ரூபாய் சேர்த்து வசூலிக்கப்படும். காலி பாட்டிலை கடைகளில் வழங்கியதும் 10 ரூபாய் திரும்ப வழங்கப்படுகிறது. இத்திட்டம் 38 மாவட்டங்களிலும் முழுவதுமாக செயல்படுத்தப்பட உள்ளது. இதன்படி அனைத்து மாவட்டங்களிலும் கிடைக்கும் காலி மது பாட்டில்கள் ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக சேகரிக்கப்படும். இந்த பணிக்கு தகுதியான ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய மாவட்ட வாரியாக டாஸ்மாக் நிறுவனம் டெண்டர் கோரி இருந்தது.

இந்த நிலையில், மேற்கண்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சுற்றுலா தலங்களில் மது கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறுவது தொடர்பாக டாஸ்மாக் அறிக்கை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் 9 மாவட்டங்களில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும்திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. 7 மாவட்டங்களில் பகுதி வாரியாக அறிமுகப்படுத்தப்பட்டு நல்லவரவேற்பு கிடைத்துள்ளது. திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட மாவட்டங்களில் 97 சதவீத பாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.தமிழ்நாட்டில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக பெற்ற பணத்தை நீர்நிலை வன மேம்பாட்டுக்காக பயன்படுத்தலாம். ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த அரசு வழக்கறிஞர்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று தெரிவித்தனர். மேலும் பாட்டில்களின் மூடியை மாற்றுவதா அல்லது திரும்பப் பெறுவதா‌ என அரசு பதிலளிக்க ஐகோர்ட் ஆணை பிறப்பித்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்