சாம்சங் போராட்டம் ..
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் தொழிற்சாலை இயங்கிவரும் நிலையில். இங்கு பணிபுரியும் சாம்சங் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, தொழிற்சங்கம் அங்கீகாரம் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு 30 நாட்கள் மேலாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த போராட்டம் நீண்ட நாட்களாக தொடர்ந்த நிலையில் அரசு தலையிட்டது. பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர்கள் டி.ஆர்.பி ராஜா, தா.மோ. அன்பரசன், சி.வி. கணேசன் ஆகியோர் அடங்கிய குழுவை முதல்வர் ஸ்டாலின் அமைத்திருந்தார். இதனிடையே பேச்சு வார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை. மீண்டும் போராட்டம் தீவிரமடைந்தது போராட்டத்தில் பங்கேற்பதற்காக தொழிலாளர்கள் வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். அப்போது காவல்துறையுடன் நடந்த வாக்குவாதத்தில் உதவி காவல் ஆய்வாளரை தொழிலாளர்கள் கீழே தள்ளியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக 7 தொழிலாளர்களை இன்று காலை வீடு தேடிச் சென்று கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை ஜாமினில் விடுவித்தனர். இதற்கிடையே தொழிலாளர்கள் அமைக்கபட்டிருந்த போராட்டப் பந்தல் இரவோடு இரவாக அகற்றப்பட்டது. இதனால் கோபம் அடைந்த ஊழியர்கள் கொட்டும் மழையில் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இந்தநிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் சாம்சங் போராட்டக்குழு ஆதரவு தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .
தொழிற் சங்கம் அமைக்க உரிமை, 8மணி நேர வேலை,ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் சாம்சங் தொழிலாளர்களை அண்ணன் கே.பாலகிருஷ்ணன், இரா. முத்தரசன், கே.வி.தங்கபாலு, அப்துல் சமது உள்ளிட்ட தோழமை இயக்க தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினோம்.
அமைதியான வழியில் போராடுகிற தொழிலாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டிருப்பதும், சிலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதும் வருத்தமளிக்கிறது. கைது செய்யப்பட்டிருக்கும் தொழிலாளர்களை உடனடியாக நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும். அனைத்து வழக்குகளையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இந்த பிரச்சனையில் முதல்வர் அவர்கள் உடனடியாகத் தலையிட வேண்டும். விரைவில் தோழமை கட்சித் தலைவர்கள் முதல்வர் அவர்களை சந்தித்து இக்கோரிக்கைகளை வலியுறுத்தயிருக்கிறோம்.
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது என்று காரணம் காட்டாமல் அரசு நேரடியாக முடிவெடுக்க முடியும். அப்படி முடிவு எடுத்தால் அந்த வழக்கு செயலிழந்து போகும். அரசுக்கு அதிகாரம் இருக்கிறது, தொழிலாளர் நலத்துறை இணை ஆணையருக்கு, பதிவாளர் என்கிற பொறுப்பு இருக்கிற ஆணையருக்கு அதிகாரம் இருக்கிறது. ஒரு சங்கத்தை பதிவு செய்வதற்கு அது சட்டபூர்வமானது சனநாயக பூர்வமானது. அதில் அதிகாரிகளுக்கு என்ன தயக்கம். இதுதான் இங்கே பிரச்சனையின் மூலமாக இருக்கிறது. அரசு அதிகாரிகளிடம் இருக்கிற இந்த தயக்கத்தை தவிர்த்து அல்லது தேக்கத்தை உடைத்து சங்கத்தை பதிவு செய்வதற்கு முன்வர வேண்டும். 17 ஆண்டுகளாக இந்நிறுவனத்தில் தொழிற்சங்கம் வைக்க அனுமதிக்காததே. ஒரு அடக்குமுறை தான்.
சாம்சங் நிறுவனத்திற்கு நாங்கள் எதிராக இல்லை. ஆனால், அதன் அடக்குமுறை போக்குக்கு எதிராக இருக்கிறோம். பன்னாட்டு நிறுவனங்களின் முதலீட்டுக்கு எதிராக இல்லை. ஆனால், அவர்கள் தொழிலாளர்களை சுரண்டுவதை எதிர்க்கிறோம். சங்கம் வைத்துக் கொள்வதற்கு சனநாயகப்பூர்வமான உரிமை இருக்கிறபோது அதை அரசு அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தி.மு.க அரசை விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தொழிற்சங்கம் என்பது ஒரு தொழிலாளியின் அடிப்படை உரிமையாகும். இப்படி தொழிற்சங்கம் வேண்டியும், சிறந்த பணிச்சூழலுக்காகவும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வரும் சாம்சங் தொழிலாளர்கள் தங்களது சட்டப்பூர்வ உரிமைகளுக்கு உட்பட்டு வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். தமிழக அரசு இதை மதிக்காமல், தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொள்வது மிக மோசமான அனுகுமுறை. தொழிலாளர்கள் அமைதியான முறையில் வேலைநிறுத்தம் செய்து வரும் போராட்டக்களத்தை அரசு அகற்றுவதில் எந்த நியாயமும் இல்லை. தொழிலாளர்களை இவ்வாறு கைது செய்வது அரசியலமைப்பிற்கு முரணானது, மேலும் தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்கு காவல்துறையை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது கண்டிக்கப்பட வேண்டியதாகும். தமிழக அரசே! தங்கள் உரிமை கேட்டுப் போராடும் தொழிலாளர்களை போராட விடு..
0 கருத்துகள்