திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகிலுள்ள மோத்தக்கல் கிராமத்தில் தலித் பெண் ஒருவர் ஒரு வாரத்திற்கு முன் இறந்துள்ளார். அவரின் உடலை அடக்கம் செய்ய சுடுகாட்டை நோக்கி இறுதி ஊர்வலம் செல்லும் போது வன்னியர் சாதி சார்ந்த சாதிய பித்து பிடித்தவர்கள் மறித்துள்ளனர். சாதிவெறிக்குத் துணைபோகும் வகையில் காவல்துறையும் பாதையை மறித்து நின்று உடலை ஏற்றிச் சென்ற அமரர் வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளது.
இவ்வூரின் அருகில்தான் திமுக அரசில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக உள்ள எ.வ.வேலுவின் சொந்த ஊரான சே.கூடலூர் உள்ளது. நெடுஞ்சாலைத்துறை அமைச்சரின் பக்கத்து ஊரில் தலித் பிணத்திற்கு சாலை உரிமையை மறுத்து சாதி வெறியும் காவல்துறையும் தடுத்து நிற்பது வெட்கக்கேடானது.
இவ்வூரைச் சார்ந்த வன்னியர்களான திமுக ஒன்றியச் செயலாளர் பன்னீர்செல்வம் என்பவரும் அவருடைய மகனான ஊராட்சி மன்றத் தலைவருமே இந்த வன்கொடுமையின் பின்னணியில் உள்ள முக்கிய குற்றவாளிகள். இவ்வூரில் உள்ள அரசுப் பள்ளியில் தலைவர்களின் உருவப்படங்களை வரையும் போது அண்ணல் அம்பேத்கர் படத்தை வரையக் கூடாது என்று சொன்னவர்களும் இவர்கள் தான். மேலும், இவ்வூரில் இரட்டைக் குவளை முடிவெட்டிக்கொள்ள தடை என தீண்டாமை நிலவுகிறது.
தமிழ்நாட்டில் சாதிய வன்முறை இல்லை, தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக விளங்குகிறது, இது திராவிட மாடல் அரசு, இந்த மண் சமூக நீதி மண் என்றெல்லாம் திமுகவும் திமுக ஆட்சியாளர்களும் உரக்கப் பேசுகின்றனர். ஆனால், இத்தகைய வன்கொடுமைகளில் கோலோச்சும் ஆயிரக்கணக்கான கிராமங்கள் இம்மண்ணில் உள்ளன என்பதே உண்மை. வெற்று சமூக நீதி பேச்சும் போலி ஜனநாயக அரசியலும் இக்கொடுமைகளை தீர்க்கப் போவதுமில்லை.
0 கருத்துகள்